ஆத்தூர் அருகே பின்பக்க டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்தது; பெண் பலி மகன் உள்பட 2 பேர் படுகாயம்


ஆத்தூர் அருகே பின்பக்க டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்தது; பெண் பலி மகன் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Jun 2017 5:27 AM IST (Updated: 3 Jun 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே பின்பக்க டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆத்தூர்,

உறவினர் திருமணம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப்பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 28). இவர் பத்திரம் எழுதுபவரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினர் திருமணம் சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக பிரவீன்குமார் ஒரு காரில் தனது தாய் கண்ணகி (50), உறவினர் செந்தில் (34) ஆகியோரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு நேற்று புறப்பட்டார். காரை செந்தில் ஓட்டினார்.

டயர் வெடித்தது

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த புதுகொத்தாம்பாடி அருகே மாலை 5 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் வலது பின்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டுப்பகுதி நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய கண்ணகி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். அவருடைய மகன் பிரவீன்குமார், செந்தில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

அவர்கள் 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பிரவீன்குமார் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், பலியான கண்ணகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story