தாய் பால் குடித்து விட்டு தூங்கிய பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகள் ‘திடீர்’ சாவு


தாய் பால் குடித்து விட்டு தூங்கிய பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகள் ‘திடீர்’ சாவு
x
தினத்தந்தி 3 Jun 2017 5:32 AM IST (Updated: 3 Jun 2017 5:32 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், தாய் பால் குடித்து விட்டு தூங்கிய பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகள் திடீரென இறந்தன.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில், தாய் பால் குடித்து விட்டு தூங்கிய பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகள் திடீரென இறந்தன. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

இரட்டை பெண் குழந்தைகள்

குமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள காற்றாடித்தட்டை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவருடைய மனைவி திவ்யா (29). இவர்களுக்கு அனுஷ்கா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திவ்யா கர்ப்பமுற்றார். இதனையடுத்து பிரசவத்துக்காக நாகர்கோவில் கோட்டார் கண்ணங்குழியில் உள்ள அவருடைய தாயார் வீட்டுக்கு வந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த 22–ந் தேதி கோட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆஸ்பத்திரியில் சிகிச்சைகளை முடித்த பிறகு 29–ந் தேதி தாயும், சேயும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

திடீர் சாவு

நேற்று அதிகாலை 4 மணி அளவில் திவ்யா 2 குழந்தைகளுக்கும் தாய் பால் கொடுத்து பசியாற்றினார். அதன் பிறகு குழந்தைகள் தூங்கின. 5.30 மணி அளவில் பார்த்த போது 2 குழந்தைகளும் இறந்து கிடந்தன. இதனை பார்த்ததும் திவ்யா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியது. உறவினர்கள் ஏராளமானோர் திவ்யா வீட்டில் திரண்டனர். தாய் பால் குடித்த குழந்தைகள் எப்படி இறக்கும்? புரையேறியதால் இறந்திருக்குமோ? என்று பேசிக்கொண்டனர். எனினும் குழந்தைகளின் உடலை காற்றாடித்தட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். அங்கு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகள் திடீரென இறந்த சம்பவம் பற்றி குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் திவ்யாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை

அதைத் தொடர்ந்து இதுபற்றி கோட்டார் போலீசில் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் மற்றும் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே சமயத்தில் இரட்டை பெண் குழந்தைகள் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story