சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் கலிவேட்டை


சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் கலிவேட்டை
x
தினத்தந்தி 3 Jun 2017 5:34 AM IST (Updated: 3 Jun 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவையொட்டி நடந்த கலிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவையொட்டி நடந்த கலிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கலிவேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 26–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் எட்டாவது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 4.30 மணிக்கு கலிவேட்டைக்கு அய்யா புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருக்க தலைமைப்பதியில் சிறிய தெரு மற்றும் நான்கு ரத வீதிகளையும் வாகனம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் பிரசித்தி பெற்ற முத்திரி கிணற்றங்கரைக்கு வந்தது. அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.

திரளான பக்தர்கள்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுற்றுப்பகுதி ஊர்களான செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகனம் பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர்.

பல கிராமங்களை சுற்றி வந்த வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலுக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரிய யுகப்படிப்பும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வடக்கு வாசலில் அன்னதர்மம் நடந்தது. கலி வேட்டை நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வருகிற 5–ந்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தலைமைப்பதி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story