கூடங்குளம் அருகே பரிதாபம் மணல் லாரி மோதி 2 சிறுவர்கள் பலி மேலும் ஒரு சிறுவன் படுகாயம்


கூடங்குளம் அருகே பரிதாபம் மணல் லாரி மோதி 2 சிறுவர்கள் பலி மேலும் ஒரு சிறுவன் படுகாயம்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அருகே மொபட் மீது மணல் லாரி மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் பலியானார்கள். மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்தான்.

கூடங்குளம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் ராஜ்(வயது 57). இவருக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் கடைசி மகன் சிவா(13). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்துள்ளான். ராஜின் தம்பி பாஸ்கர் மகன் ஜெகன்(12).

ராஜின் மூத்த மகளை திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த பால்ராஜூக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய மகன் முத்துக்கிருஷ்ணன்(12) பள்ளிக்கூட விடுமுறையையொட்டி கூடங்குளத்தில் உள்ள தாத்தா ராஜ் வீட்டுக்கு வந்து இருந்தான்.

2 பேர் சாவு

இந்த நிலையில் நேற்று காலை சிவா தனது மொபட்டில் கூடங்குளம் அருகே வசித்து வரும் மற்றொரு அக்காள் வீட்டுக்கு பீடி இலைகளை கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். அவனுடன் ஜெகன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் சென்றனர். கூடங்குளம் அருகே சேதுசுப்பிரமணியபுரம் விலக்கில் சென்றபோது எதிரில் வந்த மணல் லாரி, மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் சிவா சம்பவ இடத்திலேயே பலியானான். முத்துக்கிருஷ்ணன், ஜெகன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துக்கிருஷ்ணனும் பரிதாபமாக இறந்தான். ஜெகன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரி டிரைவர் கைது

இதையடுத்து விபத்தில் பலியான சிவா, முத்துக்கிருஷ்ணன் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கூடங்குளம் போலீசில் ராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த ராதாபுரம் அருகே உள்ள சிதம்பரபுரம் மேல அம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரை மகன் சுடலைமணியை(26) கைது செய்தனர்.
மணல் லாரி மோதி 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story