நிலுவைத்தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்
நிலுவை தொகை செலுத்தாத கேபிள் டி.வி.ஆபரேட்டர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஊட்டி,
கடந்த 2011–ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் கேபிள் நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 448 கேபிள் டி.வி ஆபரேட்டர்கள், வாடிக்கையாளர்களுக்கு கேபிள் இணைப்புகளை வழங்கி வருகின்றனர். மேலும் மாவட்ட ஆபரேட்டர்கள் கடந்த 2011–ம் ஆண்டு முதல் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 கோடியே 84 லட்சத்து 60 ஆயிரம் நிலுவைத்தொகையை£க வைத்துள்ளனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–
துண்டிப்பு நடவடிக்கைநீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் மாத சந்தா தொகையை செலுத்த பலமுறை அறிவுறுத்தப்பட்டும் தொகையை செலுத்தாமல் அரசுக்கு வருவாய் இழப்பு செய்து வருகின்றனர். ஆகவே, வருகிற 10–ந் தேதிக்குள் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், முன் அறிவிப்பு இன்றி கேபிள் இணைப்பை துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துண்டிக்கப்பட்ட இணைப்பை அனுமதியின்றி இணைத்தால், அதன் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.வழங்கும் சிக்னலை தடை செய்து, தனியாருக்கு சொந்தமான டிஜிட்டல் சிக்னலை கொடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் ஆரேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.