தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் பிணம் சாவில் உறவினர்கள் சாலைமறியல்


தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் பிணம் சாவில் உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 4 Jun 2017 3:45 AM IST (Updated: 4 Jun 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி அவருடைய உடலுடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சின்னகுன்னத்தூரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 28). பொக்லைன் டிரைவர். இவருக்கும் காவேரிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பூவிதா (23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை ராஜசேகரின் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பூவிதா பிணமாக தொங்கினார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து பூவிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பூவிதாவின் சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி அவருடைய உடலுடன் கோவிந்தாபுரத்தில் சேலம் – திருவண்ணாமலை செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன், தாசில்தார் சுப்பிரமணி, ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் பூவிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story