மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை ம.தி.மு.க. எதிர்க்கும்


மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை ம.தி.மு.க. எதிர்க்கும்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை ம.தி.மு.க. எதிர்க்கும் கோவையில் வைகோ பேட்டி

கோவை,

மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை ம.தி.மு.க, எதிர்க்கும் என்று கோவையில் வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மக்கள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து முன்பு நான் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார். ஆனால் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 48 நாட்களாக அங்குள்ள கிராம மக்கள் போராடி வருகிறார்கள். இதற்காக ம.தி.மு.க. அங்குள்ள மக்களை திரட்டி போராடியது.

இதற்கிடையில் பாறை படிவங்களுக்கிடையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளது. இதை எதிர்த்தும் மக்கள் போராடி வருகிறார்கள். மக்களுக்கு விரோதமான ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி, பாறை படிவங்களுக்கிடையில் எரிவாயு எடுக்கும் திட்டமாக இருந்தாலும் சரி அதை ம.தி.மு.க. எதிர்க்கும்.

பன்முக தன்மைக்கு எதிரானது

இது தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் உள்பட மக்கள் விரோத திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மக்களையும், விவசாயிகளையும் திரட்டி ம.தி.மு.க. போராடும்.

மாட்டு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும். ஏழை, எளிய மக்கள் மாடுகளை பராமரிக்க முடியாவிட்டால் அதை விற்க தான் முன்வருவார்கள். அவற்றை விற்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரானது.

இதயபூர்வமான வாழ்த்துகள்

கலைஞர் தலைசிறந்த இலக்கியவாதி. மிக சிறந்த ராஜதந்திரி. வாழ்க்கை தொடங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவுடனும், தந்தை பெரியாருடனும் பணியாற்றியவர். பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வை கட்டி காத்து வந்தவர். அவருடைய இலக்கிய புலமை அவருடைய எழுத்துகள், அவர் வழங்கி இருக்கிற சங்க தமிழ், குறளோவியம், பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம், தொல்காப்பிய பூங்கா இவை எல்லாம் காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள்.

கலைஞரின் சிறப்பு இயல்புகள் என்று சொன்னால் அவருடைய எழுத்தாற்றால், பேச்சாற்றல், நினைவாற்றல், சமயோசிதமாக எதிரிகள் எதை சொன்னாலும் கூட அதை எளிதில் மடக்குகிற விதத்தில் சொல்லக்கூடிய சொற் சிலம்பம் இருக்கிறதே அது அவருக்கு கைவந்த கலை. அவருடைய வைர விழா சிறப்பாக நடக்கட்டும். எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.

இவ்வாறு வைகோ கூறினார்.

பின்னர் அவர் கார் மூலம் காரைக்குடி புறப்பட்டு சென்றார். முன்னதாக கோவை வந்த வைகோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் தொண்டர்கள் வரவேற்றனர். இதில், புறநகர் மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், இளைஞர் அணி மாநில செயலாளர் வே.ஈஸ்வரன், முன்னாள் எம்.பி. டாக்டர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், டி.டி.அரங்கசாமி, மு.கிருஷ்ணசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story