பறிமுதல் செய்த ரூ.20 லட்சத்தை மறைத்த விவகாரம்: 3 போலீசார் பணியிடைநீக்கம்


பறிமுதல் செய்த ரூ.20 லட்சத்தை மறைத்த விவகாரம்: 3 போலீசார் பணியிடைநீக்கம்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் வந்த, வைர வியாபாரியின் டிரைவரிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.20 லட்சத்தை மறைத்த விவகாரம் தொடர்பாக 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று உத்தரவிட்டார்.

கடலூர்,

சென்னையில் ராசிக்கல் மற்றும் வைர வியாபாரம் செய்யும் நாகப்பட்டினத்தைச்சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் ஜலால் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த வியாபாரி தனது குடும்ப செலவுக்காக ரூ.50 லட்சத்தை டிரைவர் ஜலாலிடம் கொடுத்து ஆம்னி பஸ்சில் அனுப்பி வைத்தார்.

கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் அந்த ஆம்னி பஸ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் ஏட்டுகள் செல்வராஜ், ரவிக்குமார், ஆயுதப்படை டிரைவர் அந்தோணி சாமிநாதன் ஆகியோர் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது ஜலால் ஒரு பையில் பணம் வைத்திருந்ததை பார்த்த போலீசார், அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கினார்கள். பின்னர் அவரிடம் இருந்து 20 லட்சத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டு ஜலாலை அனுப்பி விட்டனர்.

விசாரணை

ஜலாலிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மதுவிலக்கு பிரிவு போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை.

ஆனால் இது பற்றி ஜலால் தனது உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது உரிமையாளர் தரப்பில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் ஆல்பேட்டை சோதனைச்சாவடிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கூட, பறிமுதல் செய்யப்பட்ட பணம் பற்றி மதுவிலக்கு பிரிவு போலீசார் வாய் திறக்கவில்லை. இதன்பிறகு தீவிர விசாரணைக்கு பிறகே பணத்தை சோதனை சாவடிக்கு பின்னால் உள்ள முள்புதரில் இருந்து போலீசார் எடுத்துக்கொடுத்து உள்ளனர். அதனை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

பணியிடை நீக்கம்

இதற்கிடையே பறிமுதல் செய்த பணம் பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து வைத்த விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டுகள் செல்வராஜ், ரவிக்குமார், ஆயுதப்படை டிரைவர் அந்தோணிசாமிநாதன் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.


Next Story