ஊருக்கு செல்ல பணம் தர மறுத்ததால் கடை மேற்பார்வையாளரை மண்வெட்டியால் வெட்டியவர் கைது
ஊருக்கு செல்ல பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் கடை மேற்பார்வையாளரை மண் வெட்டியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
திருமுல்லைவாயல் சுதர்சனம் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). அதே பகுதியில் கடை வைத்து உள்ளார். இவரது கடையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினோத்குமார் யாதவ் (32), தினேஷ்குமார் யாதவ்(38) ஆகிய இருவரும் வேலை செய்து வருகின்றனர்.
இதில் வினோத்குமார், கடையின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தினேஷ்குமார், தான் ஊருக்கு போகவேண்டும் எனவும், அதற்கு பணம் தரும்படியும் மேற்பார்வையாளர் வினோத்குமாரிடம் கேட்டார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததாக தெரிகிறது.
மண் வெட்டியால் வெட்டினார்இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அருகில் இருந்த மண் வெட்டியால் வினோத்குமாரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.