3-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் மாடுகளுடன் ஊர்வலமாக வந்து பங்கேற்பு


3-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் மாடுகளுடன் ஊர்வலமாக வந்து பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வலியுறுத்தி தஞ்சையில் 3-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் ஏர்கலப்பை பூட்டிய மாடுகளுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தை ஆம்ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தொடங்கி வைத்து பேசினார்.

உண்ணாவிரதத்தில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்கும் வகையில் காவிரி நீரை பெற்று தர வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழுவை மத்தியஅரசு அமைக்க வேண்டும். ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகஅரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக வாழ்வாதாரத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்படும் மத்தியஅரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஏர்கலப்பை

விவசாயிகள் அனைவரும் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலையில் இருந்து ஏர்கலப்பை பூட்டிய மாடுகள், மண் வெட்டியுடன் ஊர்வலமாக புறப்பட்டு வந்து உண்ணா விரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் புதுச்சேரி மாநில விவசாயிகள் சங்க தலைவர் காரைக்கால் ராஜேந்திரன், நிர்வாகி ஸ்ரீதர், மதுரை மண்டல நிர்வாகிகள் ஆதிமூலம், மதுரைவீரன், தேனி.செங்குட்டுவன், மாவட்ட செயலாளர்கள் நாகை ராமதாஸ், சிவகங்கை ராமமுருகன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

உற்பத்தி அழிந்து விட்டது

முன்னதாக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த அனைத்து பயிர்களும் கருகி விட்டன. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்க்கிறார்கள். விவசாயத்துக்கு மின்சாரமும் இல்லை. இதனால் உற்பத்தி முற்றிலும் அழிந்து விட்டது. கடும் வறட்சியினால் மக்கள் குடிநீருக்காக குடத்துடன் அலையும் நிலை உள்ளது.

ஆனால் தமிழக அரசு ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறப்பதற்காக, காவிரி நீரை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கர்நாடக அரசுக்கு சாதகமாக, மத்திய அரக்கு துணையாக தமிழக அரசு செயல்படுகிறது. இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறுவைக்கு தண்ணீர் இல்லை. இந்த நிலையில் தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருப்பது ஊழல் செய்வதற்கு தான்.

விரோதமான அரசு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு என்றால் விவசாயிகள் நலனை காப்பதில் முக்கிய பங்காற்றும். ஆனால் தற்போது உள்ள தமிழக அரசு அப்படி இல்லை. ஜெயலலிதாவுக்கு விரோதமாக, விவசாயிகளுக்கு விரோதமாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story