ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வீடுகளின் வாசலை மறித்து கம்பி வேலி அமைப்பு; பொதுமக்கள் போராட்டம்


ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வீடுகளின் வாசலை மறித்து கம்பி வேலி அமைப்பு; பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வீடுகளின் வாசலை மறித்து கம்பி வேலி அமைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு பெரியார்நகர் அண்ணாநகர் பகுதியில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு சமூகவிரோத செயல்கள் நடப்பதாக வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள். இதனால் அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கம்பி வேலி அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் உள்ள வீடுகளின் வாசல் வரை வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடம் இருந்தது. இதனால் வீட்டு வாசலை மறித்தப்படி கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதை எதிர்பாராத பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

கம்பி வேலி

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் நந்தகோபால், இளநிலை பொறியாளர் ராமநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்களுடைய வீட்டு வாசல் வரை கம்பி வேலி அமைக்கப்படுகிறது. நாங்கள் எப்படி வீட்டிற்குள் சென்றுவர முடியும். எனவே கம்பி வேலியை அப்புறப்படுத்த வேண்டும். எங்களுடைய வீடுகளுக்கு பட்டா உள்ளது. ஏற்கனவே இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டபோது நடைபாதைக்கு 10 அடி இடைவெளி விட்டு கம்பி வேலி அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். ஆனால் வீட்டு வாசலை மறித்து கம்பி வேலி போடப்பட்டு உள்ளது. எனவே கம்பி வேலியை அப்புறப்படுத்த வேண்டும்’’, என்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து வீடுகளின் வாசலை மறித்து அமைக்கப்பட்ட கம்பி வேலி அகற்றப்பட்டது.

பொது வழிப்பாதை

இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலம் அண்ணா நகரில் உள்ளது. இந்த நிலம் திறந்தவெளியாக இருப்பதால் சிலர் மது அருந்திவிட்டு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இதனால் அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைப்பதற்காக கடந்த 2 நாட்களாக நில அளவீடு பணிகள் செய்யப்பட்டன.

நிலத்தில் யாரும் நுழையாத வகையில் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்தது. ஆனால் வழிப்பாதையை மறித்து கம்பி வேலி அமைப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில்தான் கம்பி வேலி அமைக்கப்பட்டது. பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது’’, என்றனர்.


Next Story