பித்தப்பை கல் அடைப்பால் அவதி: அட்டாக் பாண்டி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
மதுரையை சேர்ந்தவர் பொட்டுசுரேஷ். முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான இவர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
மதுரை,
மதுரையை சேர்ந்தவர் பொட்டுசுரேஷ். முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான இவர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் பொட்டுசுரேஷ் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி உள்பட 18 பேர் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதற்கிடையே அட்டாக் பாண்டி தலைமறைவானார். சுமார் 2½ ஆண்டுகளுக்கு பின்பு மும்பையில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் ஜெயிலில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை 6 மணி அளவில் கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்ததில் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருப்பதும், பித்தப்பையில் கல் அடைப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.