சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோகும் வேளாண் ஆராய்ச்சி மையம்
விவசாயம்! இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையல்ல.
விவசாயம்! இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையல்ல. இதன்காரணமாக பாலைவன நாடுகளில் கூட விவசாயம் செய்ய அந்த நாடுகளின் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலானோரின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.
வேளாண் ஆராய்ச்சி மையம்இந்தியாவில் முந்தைய காலங்களில் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், போதிய மழை இன்மை, பருவம் தவறிய மழை ஆகியவற்றால் விவசாயம் அழிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்பனை செய்துவிட்டு வேறு வேலைக்கு செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு விற்கப்படும் நிலங்கள் வீட்டுமனைகளாக போடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய காலத்தில் பச்சை பசேலென்று இருந்த விவசாய நிலங்கள் தற்போது வீட்டுமனைகளாக காட்சி அளிக்கிறது.
இதனால் விவசாயத்தை அழிய விடாமல் காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக இந்திய வேளாண் மற்றும் ஆராய்ச்சி மையம் என்று மத்திய அரசு புதிய அமைப்பை அமைத்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் மூலம் மகசூலை அதிகரிப்பது பற்றி விவசாயிகளுக்கு புதிய, புதிய யுக்திகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் மகிழ்ச்சிபயிர்களை நோய்கள் தாக்காமல் தடுப்பது எப்படி?, மருந்துகள் தெளிக்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது எப்படி? போன்ற பல்வேறு சந்தேகங்களை இந்த ஆராய்ச்சி மையம் விவசாயிகளுக்கு தீர்த்து வைக்கிறது. இந்த ஆராய்ச்சி மையம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் இந்தியா முழுவதும் இந்த ஆராய்ச்சி மையத்தை நிறுவ மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையம் சாம்ராஜ்நகரிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாம்ராஜ்நகரில் கடந்த 2015–ம் ஆண்டு துருவநாராயண் எம்.பி. அடிக்கல் நாட்டினார். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பருத்தி, சோளம் அதிகம் பயிரிடப்படுவதால், அதற்குரிய சந்தேகங்கள் இந்த ஆராய்ச்சி மையத்தில் தீர்த்து வைக்கப்படும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
கோரிக்கைசாம்ராஜ்நகர் டவுன் பகுதியில் வேளாண் ஆராய்ச்சி மையம் கட்டப்படும் வரை, அரதனஹள்ளி பகுதியில் உள்ள கட்டிடத்தில் இந்த விவசாய ஆராய்ச்சி மையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வந்து தான் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை தீர்த்து வந்தனர். ஆனால், இந்த ஆராய்ச்சி மையம் அரதனஹள்ளி கிராமத்தில் சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வந்ததால், விவசாயிகளின் சந்தேகங்கள் மட்டும் தீர்க்கப்பட்டு வந்தது. ஆனால், விவசாய பயிர்களை தாக்கி உள்ள நோய்கள் பற்றி ஆராய போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் அளிக்காமல் இருந்தது.
இதன்காரணமாக சாம்ராஜ்நகர் டவுனில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டி, வேளாண் ஆராய்ச்சி மையத்தை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும், வேளாண் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
பறிபோகும் அபாயம்வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு தேவையான இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கவில்லை என தெரிகிறது. வேளாண் ஆராய்ச்சி மையம் அமைவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த மையத்துக்கு வேண்டிய இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்காததால், சாம்ராஜ்நகர் டவுனில் அமைய இருந்த விவசாய ஆராய்ச்சி மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைய இருந்த வேளாண் ஆராய்ச்சி மையம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மாநில அரசு தலையிட்டு, சாம்ராஜ்நகரில் வேளாண் ஆராய்ச்சி மையம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாம்ராஜ்நகர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.