சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு மாநில விருது 15–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு மாநில விருது 15–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடலூர்,

இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது தமிழக அரசால் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருதானது 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த ஆண்டுக்கான முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட உள்ளது. எனவே 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்கு தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கவனத்தில் கொள்ளப்படும்.

இணையதளம்

இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, வருகிற 15–ந்தேதி மாலை 5 மணிக்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story