அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு: பணிநேரங்களில் ஊழியர்கள் வெளியே செல்லக்கூடாது


அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு: பணிநேரங்களில் ஊழியர்கள் வெளியே செல்லக்கூடாது
x
தினத்தந்தி 4 Jun 2017 4:45 AM IST (Updated: 4 Jun 2017 4:43 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு: பணிநேரங்களில் ஊழியர்கள் வெளியே செல்லக்கூடாது கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை

புதுச்சேரி,

அரசு ஆஸ்பத்திரியில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊழியர்கள் பணிநேரங்களில் வெளியே செல்லக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு

புதுவை கவர்னர் கிரண்பெடி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.

அப்போது அங்கிருந்த வருகைப்பதிவேடு உள்ளிட்ட சில கோப்புகளில் பென்சிலால் எழுதப்பட்டிருப்பதை கண்டார். இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு வைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பணிநேரத்தில் வெளியே செல்லக் கூடாது

மேலும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தும் முறை, மருந்துகள் இருப்பு விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். சுகாதார நிலைய வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஊழியர்களை கவர்னர் அறிவுறுத்தினார். பணிநேரத்தில் ஊழியர்கள் வெளியே செல்லக்கூடாது. சிறப்பு மருத்துவர்களின் வருகை குறித்த விவரங்களை தனியாக பதிவு செய்து வைக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள மருந்துகளின் இருப்புகள் குறித்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மருத்துவ கழிவுகள் விற்பனை

அதன்பின் மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ கழிவுகளை சிலர் எடுத்து சென்று விற்பனை செய்வதாக சமூக வலைதளங்கள் மூலம் வந்த புகார்கள் தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவ கழிவுகளை கையாள தெரியாத ஊழியர்களே அவற்றை அகற்றும் பணியில் ஈடுபடுவதை கண்டார். இதுபோன்ற பணிகளில் தகுந்த ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும். மருத்துவ கழிவுகளை அகற்றும் பணிகளை சி.சி.டி.சி. மூலம் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.

இந்த ஆய்வின்போது மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சுஜாதா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி நாராயணன், கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story