கர்நாடக வனப்பகுதியில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு


கர்நாடக வனப்பகுதியில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2017 4:53 AM IST (Updated: 4 Jun 2017 4:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

மேட்டூர்,

 இதற்கிடையே, அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் வண்டல் மண் அளவை அதிகாரிகள் ஜி.பி.எஸ். முறையில் கணக்கிட்டனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தீவிரம் அடைந்து உள்ளது. இந்த மழை தமிழகத்தில் இதுவரை தொடங்கவில்லை. இந்த நிலையில் கர்நாடக மாநில வனப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, காவிரியின் துணை நதியான பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதாவது, கடந்த 1–ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,113 கனஅடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் நேற்று முன்தினம் வினாடிக்கு 1,299 கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 1,339 கனஅடியாக வந்தது.

நீர்மட்டம் உயர்வு

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 1,000 கனஅடிக்குமேல் அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

அதாவது, நேற்று முன்தினம் 23.65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 23.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

அளவிடும் பணி

இதற்கிடையே, மேட்டூர் அணை நீர்த்தேக்கப்பகுதிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை தூர்வாருவதற்காக மத்திய அரசின் சார்பு நிறுவனமான ‘வெப்காஸ்‘ நிறுவனத்தினர் கடந்த சில மாதங்களாக அளவீடு பணி மேற்கொண்டு வருகின்றனர். இதில் துல்லியமாக கணக்கிடும் வகையில் நேற்று ஜி.பி.எஸ். முறையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணியை பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் பழனிகுமார் நேரில் வந்து பார்வையிட்டார். பண்ணவாடி பரிசல்துறை, மூலக்காடு, மேட்டூர் அணையின் வலதுகரை உள்பட நீர்த்தேக்கப்பகுதிகளின் பல்வேறு இடங்களில் இந்த அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் சுப்பிரமணியன், உதவி நிர்வாக பொறியாளர் வசந்தன், அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story