ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் கண்ணாடி உடைப்பு போதை ஆசாமி கைது
சேலம் அருகே ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை கல்வீசி உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கருப்பூர்,
சேலம் அருகே சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 50). அ.தி.மு.க. (அம்மா) அணி பிரமுகரான இவர், தனது மகள் திருமணத்திற்கு சீதனமாக கொடுப்பதற்காக புதிய கார் ஒன்றை வாங்கினார். நேற்று முன்தினம் இரவு புதிய காரில் சுந்தரபாண்டியன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு திருமண அழைப்பிதழை கொடுக்க சென்றார்.
பின்னர், அவர் கருப்பூர் பகுதியில் வசிக்கும் ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே இருந்த எம்.எல்.ஏ.விடம் சுந்தரபாண்டியன் திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
கார் கண்ணாடி உடைப்புஅப்போது, வெளியில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வெளியே ஓடிவந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் அளவுக்கு அதிகமாக மதுஅருந்திவிட்டு கார் அருகில் கற்களுடன் நிற்பது தெரியவந்தது. மேலும், அந்த ஆசாமி காரின் பின்புற கண்ணாடியை உடைக்க முயன்றார். இதை பார்த்த சுந்தரபாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ.வெற்றிவேல் ஆகியோர் அந்த போதை ஆசாமியை மடக்கி பிடித்தனர். ஆனால் அந்த ஆசாமி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.
இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த ஆசாமியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
போதை ஆசாமி கைதுஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த போதை ஆசாமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவர் கருப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (37) என்பது தெரியவந்தது. அவர், மதுபோதையில் இருந்தபோது கார் கண்ணாடியை உடைத்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக சூரமங்கலம் போலீசில் சுந்தரபாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று செந்தில்குமாரை கைது செய்தனர். அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.