பள்ளி மாணவர்களுக்காக கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6–ந் தேதி வெளியிடப்படும்


பள்ளி மாணவர்களுக்காக கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6–ந் தேதி வெளியிடப்படும்
x
தினத்தந்தி 4 Jun 2017 5:34 AM IST (Updated: 4 Jun 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்காக கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6–ந் தேதி வெளியிடப்படும் என்று காட்பாடியில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

காட்பாடி,

பள்ளி மாணவர்களுக்காக கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6–ந் தேதி வெளியிடப்படும் என்று காட்பாடியில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தற்காலிக அங்கீகார ஆணை

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணை வழங்கும் விழா காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.

விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கோ.அரி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன், சு.ரவி, லோகநாதன், ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி வரவேற்றார்.

விழாவில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 491 மெட்ரிக் பள்ளிகள், 40 நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

புதிய கல்வி மாவட்டம்

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வி பெற வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தை அப்போது முதல்–அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அதன் பிறகு ஜெயலலிதா தன்னுடைய ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காண்பித்தார்.

தமிழக முதல் –அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அரசு மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. உங்களுக்கும், எங்களுக்கும் போட்டி இல்லை. சிறப்பான திட்டங்களை படிப்படியாக கொண்டு வருகிறோம். கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற மக்களின் நலன் கருதியும், தமிழக பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் வருகிற 6–ந் தேதி வெளியிடப்படும்.

பிளஸ்–1 பொதுத்தேர்வு

இந்தாண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.22 ஆயிரத்து 892 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளும், சுமார் 3 ஆயிரம் நர்சரி பள்ளிகளும் உள்ளன. உங்களுடைய சுற்றுப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நவீன கழிவறைகளை நீங்கள் கட்டித்தர வேண்டும். இதற்காக 5 ஆயிரம் கழிவறைகளை கட்டி தருவதற்காக தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன.

பள்ளி மாணவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் சீருடை மாற்றப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்– 2 வகுப்புகளை போலவே பிளஸ்–1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக அட்டவணை அறிமுகப்படுத்தப்படும்.

மெட்ரிக் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளிலும் மாதிரி தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்படும். பல்வேறு இடர்பாடுகள் வரும்போதும் அதை தாங்கக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. இந்த அரசு நிலைத்து நிற்குமா என்கிறார்கள். 5 ஆண்டுகள் மட்டும் இல்லாமல் 50 ஆண்டுகள் அரசு நீடித்து நிலைத்து நிற்கும். பள்ளி கல்வித்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் புரட்சி செய்ய உள்ளோம். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு ஒன்றியங்களிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். மாணவர்களுக்கு யோகா கற்றுதரப்படும். பள்ளி கட்டிட அனுமதிக்கு வீட்டு வசதித்துறை அமைச்சரிடம் பேசி நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விளையாட்டு மைதானம்

இதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வேலூர் மற்றும் திருச்சி, கோவையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு கல்வி நிர்ணய கட்டண குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டண பட்டியல் வெளியிடப்படும். குறைந்த மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் மூட வாய்ப்பில்லை என்றார்.

அமைச்சர்கள்

விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் பேசினர்.

இதில் தொடக்க கல்வி இணை இயக்குனர் சசிகலா, மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பள்ளிகளின் மாநில தலைவர் நந்தகுமார், தூசி மோகன் எம்.எல்.ஏ. சன்பீம் பள்ளி கவுரவ தலைவர் அரிகோபாலன், தாளாளர் தங்கபிரகாஷ், ஆவின் தலைவர் வேலழகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுமைதாங்கி ஏழுமலை, பி.எஸ்.என்.எல். ஆலோசனை குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே.அப்பு, கூட்டுறவு நிலவளவங்கி இயக்குனர் ஜனனீசதீஷ்குமார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துரைசாமி நன்றி கூறினார்.

வேலூரில் மேலும் ஒரு கல்வி மாவட்டம்

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், ‘‘வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டமாகும். இங்கு ஏற்கனவே இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. 3–வதாக ஒரு கல்வி மாவட்டத்தை உருவாக்க கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து முதல் –அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இதேபோல தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களிலும் கல்வி மாவட்டத்தை பிரிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது மெட்ரிக்குலேசன், நர்சரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதனை நிரந்தர அங்கீகாரமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதனை அரசு பரிசீலனை செய்யும்’’ என்றார்.


Next Story