உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 4 Jun 2017 11:25 AM IST (Updated: 4 Jun 2017 11:25 AM IST)
t-max-icont-min-icon

அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். வயது 40. அவரது மனைவி வீட்டின் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் பணியாற்றுகிறார். அவர்களது மகள் பள்ளிக்கு செல்லும் சிறுமி.

வர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். வயது 40. அவரது மனைவி வீட்டின் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் பணியாற்றுகிறார். அவர்களது மகள் பள்ளிக்கு செல்லும் சிறுமி.

முன்பெல்லாம் அப்பா அவளுக்கு ரொம்ப பிடித்தமானவராகத்தான் இருந்தார். நிறைய கதை சொல்வார். அவள் கேட்கும் பொதுஅறிவு கேள்விகளுக்கெல்லாம் ஆழ்ந்து விளக்கி பதிலளிப்பார். வெளி இடங்களுக்கெல்லாம் அழைத்துச்செல்வார். அம்மாவும்- அப்பாவும் ஒருவருக்கொருவர் அவ்வளவு பிரியமாக நடந்துகொள்வார்கள். வாழ்க்கையே அவளுக்கு ஒரு ஆனந்தபூந்தோட்டம் போன்றிருந்தது.

சொர்க்கம் போன்றிருந்த அவர்கள் வீடு, தலைகீழாக மாறி இரண்டு ஆண்டுகளாக நரகம் போன்று ஆகிவிட்டதை அந்த சிறுமி உணர்ந்தாள். காரணம், தந்தையின் குடிப்பழக்கம். காலையில் டிப்டாப்பாக கிளம்பி அலுவலகத்திற்கு செல்லும் சாந்தமான தந்தை, இரவில் போதையோடு வீட்டிற்குள் நுழைவார். அம்மா பயந்து பதுங்கிக்கொள்வாள். ஆனாலும் ஏதாவது ஒரு கார ணத்தைகூறி, வாக்குவாதத்தை ஆரம்பிப்பார். முதலில் தான் சொல்வதுதான் சரி என்று முரட்டுத்தனமாக கத்திக்கொண்டிருந்தார். பின்பு மனைவியை தாக்கத் தொடங்கினார்.

முதலில் சண்டைச் சத்தம் தங்கள் தூக்கத்தை கெடுப்பதாக கூறி, அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜன்னல்களை எல்லாம் இறுக்கமாக மூடிக்கொண்டார்கள். அவர் மனைவியை அடிக்க தொடங்கியதும் ஒருசில முறை வந்து எடுத்துரைத்துப் பார்த்தார்கள். பலனில்லை என்பது தெரிந்ததும், ‘வீட்டை காலி செய்துவிட்டு வேறு எங்கேயாவது போக வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள்’ என்று, ‘ஐடியா’ கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள்.

சிறுமி, தந்தையிடம் சொல்லிப்பார்த்தாள். காலையில் அவள் எதை சொன்னாலும் அத்தனைக்கும் தலையசைக்கும் அவரால் இரவில் போதையில், தான் மிருகம் போன்று மாறுவதை தவிர்க்கமுடியவில்லை.

மனைவி மனதளவில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானாள். தினமும் அடி வாங்கிய காயங்கள் வெளியே தெரிவது அவளுக்கு பள்ளியில் அவமானத்தை ஏற்படுத்தியதால் அடிக்கடி லீவு போட்டாள். பள்ளி நிர்வாகம் அவளை வார்த்தைகளால் மேலும் காயப்படுத்தியது.

அம்மாவுக்கு ஏற்பட்ட காயங்களும், சமூகத்தில் ஏற்படும் அவமானங்களும் சிறுமியை தீவிரமாக யோசிக்கவைத்தது.

அன்று காலை அலுவலகத்திற்கு அவசரஅவசரமாக கிளம்பிக்கொண்டிருந்த தந்தையிடம் மகள் வந்தாள். தந்தையிடம் முகம்கொடுத்து பேச விரும்பாத அவள், தனது கையில் இருந்த செல்போனை அவரிடம் நீட்டினாள். அதில் இருந்த வீடியோ ஓடியது. முதல் நாள் அவர் மனைவியை வீட்டைச் சுற்றி துரத்தி விரட்டியடித்த காட்சியும், அவள் போட்ட மரணக்கூச்சலும் அப்படியே பதிவாகியிருந்தது. அவர் கண்கள் அதில் நிலைகுத்தி நிற்க, ‘என் ஸ்கூல் பிரெண்ட்டோட அப்பா வக்கீல். அவர்கிட்டே இதை காட்டினேன். உங்ககிட்டே இருந்து அம்மா விவாகரத்து வாங்குறதுக்கு இந்த ஒரு ஆதாரமே போதும்ன்னார்’ என்றாள்.

அவர் மகளை விழிக்கு விழி பார்க்க தடுமாற, ‘நீங்க இன்றைக்கும் குடித்துவிட்டு வந்தால் வீட்டுக்கு வராதீங்கப்பா. வேறு எங்கேயாவது போயிடுங்க. எனக்கு இந்த அப்பா வேண்டாம். இன்றைக்கும் குடிச்சிட்டு வந்தால் நான் அம்மாவை கூட்டிக்கிட்டு வீட்டைவிட்டு வெளியே போயிடுவேன். பக்கத்து போலீஸ் நிலையத்தில் போய் உட்கார்ந்திடுவேன்’ என்றாள். அவள் பேச்சில் சொன்னதை செய்துமுடிக்கும் அழுத்தம் இருந்தது.

நீங்க குடிப்பழக்கம் உள்ளவரா? திருந்துகிற வழியை பாருங்க! பாவம் பாதிக்கப்பட்ட பிள்ளைங்க இந்த மாதிரி அதிரடியாக ஏதேதோ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க..!!

- உஷாரு வரும்.

Next Story