கவனச்சிதறலை கண்காணியுங்கள்


கவனச்சிதறலை கண்காணியுங்கள்
x
தினத்தந்தி 4 Jun 2017 12:33 PM IST (Updated: 4 Jun 2017 12:33 PM IST)
t-max-icont-min-icon

மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது உடலும், மனமும் சீரான இயக்கத்தில் இருந்து மாறுபடும். இதயத்துடிப்பு வழக்கத்தை விட வேகமாக துடிக்கும்.

ன அழுத்தத்திற்கு ஆளாகும்போது உடலும், மனமும் சீரான இயக்கத்தில் இருந்து மாறுபடும். இதயத்துடிப்பு வழக்கத்தை விட வேகமாக துடிக்கும். ஒருவித படபடப்பு தொற்றிக்கொள்ளும், நடுக்கம், மூச்சு வாங்குதல், வியர்த்து வழிதல், தசைகள் இறுக்கமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். தூக்கமின்மை, ஞாபக மறதி, கவனச் சிதறல், முன்கோபம், பசியின்மை போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும். எந்தவொரு விஷயத்திலும் சட்டென்று முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமை, தேவையற்ற மனக்கவலை, தன்னம்பிக்கையின்றி செயல்படுதல், மனக்குழப்பம், பய உணர்வு போன்றவை எட்டிப்பார்க்கும். அன்றாட செயல்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தும். நண்பர்கள், குடும்பத்தினருடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தி தனிமை உணர்வை தோற்றுவிக்கும்.

மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்படும்போதே அதற்கான காரணத்தை அறிய முயற்சிக்க வேண்டும். திடீர் மன அழுத்தம் தோன்ற காரணம் என்ன? பிறருடைய செயல்பாடுகளால் ஏற்பட்ட அதிருப்தி காரணமா? வீடு அல்லது அலுவலக வேலைக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று சிந்தியுங்கள். எதிர்மறை சிந்தனைகள் தோன்றுவதற்கு இடம் கொடுக்காதீர்கள். அத்தகைய சிந்தனை உடையவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிருங்கள். அவருடைய செயல்பாடுகள், எண்ண ஓட்டங்களின் தாக்கம் உங்களிடம் பிரதிபலிக்கக்கூடும்.

எடுத்த காரியத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் இருக்கும்போது தொடர்ந்து அதிலேயே கவனத்தை செலுத்தி கொண்டிருக்காமல் சில நிமிடங்கள் மனதுக்கு ஓய்வு கொடுங்கள். ஏனெனில் தொடர்ந்து அதே சிந்தனையில் இருக்கும்போது, ‘எப்படி முடிக்கப்போகிறோமோ?’ என்ற பதற்றம் வந்துவிடும். அது செய்துகொண்டிருக்கும் வேலைக்கு இடையூறையும், மன குழப்பத்தையும் விளைவிக்கும். அதனை தவிர்க்க சில நிமிடங்கள் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். சில நிமிடங்கள் ஆழ்ந்து மூச்சை உள் இழுத்து வெளிவிடலாம். தொடர்ந்து மூச்சை உள் இழுத்து வெளியிடும்போது மனம் இலகுவாகும். மனதுக்கு பிடித்தமான விஷயங்களிலும் கவனத்தை பதிக்கலாம். குழந்தைகளின் குறும்பு தனங்களை காட்சிப்படுத்தும் போட்டோக்களை பார்த்து ரசிக்கலாம். நகைச்சுவை உணர்வு ததும்பும் வீடியோக்களை கண்டுகளிக்கலாம். 

Next Story