கோடை விடுமுறை முடியும் தருவாயில் வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோடை விடுமுறை முடியும் தருவாயில் வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடியும் தருவாயில் வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் உல்லாச ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறையின் தொடக்க நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், வைகை அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் கோடை விடுமுறை முடியும் தருவாயில் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் நேற்று குவிந்தனர்.

உல்லாச ரெயில்

சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரெயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர். மேலும் வைகை அணையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் இசை நடன நீருற்றையும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

மேலும் வைகை அணையின் வலது கரையில் சிறுவர்கள் பூங்காவில் அமைக்கப்பட்டு இருக்கும் வண்ண மீன்கள் கண்காட்சியையும் நூற்றுக்கணக்கான பயணிகள் கண்டு ரசித்தனர். அதே பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்த மிருக காட்சி சாலை தற்போது பயன்பாடின்றி காணப்படுகிறது. இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், போதுமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story