காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 17–வது நாளாக தொடரும் போராட்டம்
காரைக்குடி அருகே மித்ராவயலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 17–வது நாளாக தொடரும் போராட்டம்
காரைக்குடி,
காரைக்குடி அருகே மித்ராவயலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 17–வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதுவரை அதிகரிகள் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
தொடர் போராட்டம்காரைக்குடி அருகே உள்ள மித்ராவயல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மாதர் சங்கம், கிராம பெண்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து கடந்த மாதம் 20–ந்தேதியில் தொடர்ந்த போராட்டம் கடந்த 16 நாட்களாக நடந்து வருகின்றது. மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி பாடல்களை பாடியும், உண்ணாவிரத போராட்டம், பாடை கட்டியும், நெற்றியில் நாமம் இட்டும் பல்வேறு விதமாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 2 வாரங்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
17–வது நாளாக...இந்தநிலையில் நேற்று 17–வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது கடை முன்பு சமையல் செய்து சாப்பிட்ட அவர்கள், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கல்பனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் கூறும்போது, மித்ராவயலில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்றிக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரையில் எந்தவொரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. கடையை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றனர்.