பாரம்பரியத்தை நினைவுக்கூரும் விதமாக மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்த மணமக்கள்
காரைக்குடியில் பாரம்பரியத்தை நினைவுக்கூரும் விதமாக மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்த மணமக்கள்
காரைக்குடி,
பாரம்பரிய கலாசாரத்தை நினைவுக்கூரும் விதமாக காரைக்குடியில் மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று திருமணம் செய்தனர்.
மாட்டு வண்டியில் ஊர்வலம்காரைக்குடி அருகே உள்ள கோ.வேலங்குடியை சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கும், காரைக்குடி தெற்குத்தெருவைச் சேர்ந்த கீர்த்திக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, நேற்று தெற்குத்தெரு பகுதியில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதையொட்டி மணமகனான கிருஷ்ணா பாரம்பரிய முறைப்படி பழங்கால மக்கள் அப்போதைய திருமணத்தை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு திருமணம் முடித்ததைப்போல், திருமணம் செய்து மக்களிடையே நமது பாரம்பரியத்தை நினைவுகூர விரும்பினார்.
இதையடுத்து மணமக்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்துக்கொண்டனர். மணமக்களின் உறவினர்கள் மற்ற 3 மாட்டு வண்டிகளில் ஏறி திருமண மண்டபம் சென்றனர். அங்கு திருமணம் முடிந்த பின்னர் மணமகளின் வீட்டில் இருந்து மணமகனின் வீட்டிற்கு புதுமண தம்பதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மேளதாளம் முழங்க 6 கிலோ மீட்டர் தூரம் வரை மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றனர். பின்னர் அங்கு மணமக்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி...இதுகுறித்து மணமகன் கிருஷ்ணா கூறியதாவது:– தற்போது உள்ள விஞ்ஞான அறிவியல் உலகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட தங்களது திருமணத்தை ஆடம்பரமாக செய்து வருகின்றனர். திருமணம் முடிந்த பின்னர் விலை உயர்ந்த காரில் மணமக்கள் அழைப்பு நடைபெறுகிறது. ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் எவ்வாறு திருமண அழைப்பை நடத்தினார்கள் என்பது தற்போது உள்ள இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவதில்லை. அவ்வாறு தெரிந்தால் கூட அவர்கள் சினிமா படங்களில் வரும் காட்சிகளை மட்டும் தான் காணமுடியும்.
இதுதவிர இன்னும் வசதி படைத்த சிலர் தற்சமயம் ஹெலிகாப்டரில் வந்து மணமக்களை அழைத்து சென்று திருமணம் முடித்த செய்திகளை கூட நாம் தெரிந்துள்ளோம். இவற்றிற்கு மாற்றாக புதுமையாக எனது திருமணத்தை நடத்த விரும்பி அதை என்னுடைய உறவினர்களிடம் தெரிவித்த போது அவர்களும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து எனது திருமணம் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று நடைபெற்றது. முன்னதாக எனது வீட்டில் வளர்த்த காளைகளை வண்டியில் பூட்டி ஊர்வலமாக சுமார் 6 கிலோ மீட்டர் சென்றோம். பழங்காலத்து பாரம்பரிய சம்பவத்தை மக்களுக்கு நினைவுக்கூரும் முயற்சியாகவும் இது அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.