கல்வராயன்மலை வனப்பகுதியில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலை வனப்பகுதியில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
சாராயவேட்டைகச்சிராயப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்குள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி கல்வராயன்மலை மற்றும் அடிவார பகுதி கிராமங்களை சேர்ந்த ஒரு சிலர் சாராயத்தை காய்ச்சி விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக கரியாலூர் போலீசாருக்கு புகார் வந்தன.
அதன்அடிப்படையில் கரியாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்–இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, திருமால், பாபு, சேது ஆகியோர் தலைமையிலான 50–க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம், சேராப்பட்டு, மாயம்பாடி, பொட்டியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
ஊறல் அழிப்புஅப்போது மல்லிகைப்பாடி, கரடிசித்தூர், பொட்டியம் ஆகிய கிராம அடர்ந்த வனப்பகுதி நீரோடைகளின் அருகே சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள், மண் பானைகள் மற்றும் சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த அடுப்புகளை கைப்பற்றி அழித்தனர்.
சாராயம் விற்ற 3 பேர் கைதுமேலும் வனப்பகுதிகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மல்லிகைப்பாடியை சேர்ந்த குண்டம்மா(வயது 40), பால்ராம்பட்டு கணேசன் மகன் பன்னீர்செல்வம்(42), மாத்தூர் காலனியை சேர்ந்த நடேசன் மகன் செல்வராஜ்(45) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.