பொள்ளாச்சி நகரில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


பொள்ளாச்சி நகரில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:15 AM IST (Updated: 5 Jun 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகரில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வளர்ந்து வரும் நகரம் ஆகும். பொள்ளாச்சி வழியாக தினமும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பொள்ளாச்சி சுற்றுலா சார்ந்த பகுதி என்பதால் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் பொள்ளாச்சியில் அதற்குரிய சாலை வசதிகள் இல்லை. இதனால் பொள்ளாச்சி நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

இதற்கிடையில் நியூஸ்கீம் ரோடு, பல்லடம் ரோடு, கடை வீதி, கோவை ரோடு, உடுமலை ரோடு உள்பட நகரின் முக்கிய சாலைகளில் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி நிலை உள்ளது. இதன் காரணமாக தினமும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

போலீசார் கண்காணிக்க வேண்டும்

பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்குரிய சாலை வசதிகள் பொள்ளாச்சியில் இல்லை. இதற்கிடையில் போக்குவரத்து விதிமுறை மீறல் காரணமாக வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் நியூஸ்கீம் ரோடு உள்பட நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காந்தி சிலை சிக்னலில் நிற்கும் போக்குவரத்து போலீசார் நியூஸ்கீம் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதை கண்டு கொள்வதில்லை. எனவே போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை விதிமுறைகளை கடைபிடித்து ரோட்டோரங்களில் நிறுத்த வேண்டும். அப்போது தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்


Next Story