ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றம்


ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றம் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ஊட்டி,

ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

தூய இருதய ஆண்டவர் ஆலயம்

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தாவரவியல் பூங்கா, கலெக்டர் அலுவலகம், ஸ்டீபன் ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் பழமை மாறாமல், மிகவும் வலிமையுடன் காட்சி அளிக்கிறது.

அதில் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் தேவாலயம் ஊட்டியில் உள்ளது. இந்த தேவாலயம் பாரம்பரியம் மிக்க கட்டிடமாகும். ஊட்டிக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஆலயத்திற்கு வர தவறியதில்லை. அவ்வாறு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் முன்னோர்கள் உருவாக்கிய பல்வேறு கட்டிடங்களை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர். மேலும் இந்த ஆலயத்தில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடந்து உள்ளன. இதனால் இந்த தூய இருதய ஆண்டவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றதாக விளங்கி வருகிறது.

திருவிழா கொடியேற்றம்

இந்த நிலையில் தூய இருதய ஆண்டவர் ஆலய 120–வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 9 மணிக்கு பங்கு தந்தை ஜான் ஜோசப் தலைமையில் சிறப்பு வழிபாடும், சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியும் நடந்தது.

இதையடுத்து அவர் அனைத்து மக்களும் நலன் பெற வேண்டி மறையுரை வழங்கினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயத்தின் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் பங்கு தந்தை ஜான் ஜோசப் ஜெபம் செய்து, திருவிழா கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

திருவிழாவையொட்டி, ஒரு வாரம் சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 11–ந் தேதி நடக்க இருக்கிறது. அன்று காலை 9 மணிக்கு நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறும். மாலை 5 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் நன்றி திருப்பலி நடைபெறும். அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற உள்ளது.


Next Story