கல்வித்துறையில் 41 புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்
கல்வித்துறையில் 41 புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
கடத்தூர்,
கல்வித்துறையில் 41 புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்கோபி தாலுக்கா அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ் தலைமை தாங்கினார். கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார். விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு 28 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறையில் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அறிவிக்கும் போதே, தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதிகளையும் வெளியிட்டது இந்த அரசுதான். மேலும் தேர்வு முடிவுகளை செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக மாணவ, மாணவிகளுக்கு அறிவித்ததும் இந்த அரசு தான்.
புதிய திட்டங்கள்கல்வித்துறை வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. இத்துறையில் மாற்றம் செய்வதற்காக புதிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட உள்ளது. இதில் கல்வியாளர்கள், அறிஞர்கள் இடம் பெற உள்ளனர்.
மேலும், வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியத்தின் போது 41 புதிய கல்வித் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழக கல்வித்துறை இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரியாக திகழும்.
புண்படுத்தாதீர்கள்...ஆசிரியர் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்திருப்பதாக ஒரு பத்திரிகையில் (தினத்தந்தியில் அல்ல) செய்தி வெளிவந்துள்ளது. எங்கள் துறையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை புண்படுத்தாதீர்கள். மேலும், இந்த அரசு எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற நிலை மாறி எடுப்போம், முடிப்போம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு 5 ஆண்டுகள் அல்ல 50 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நீடிக்கும் என்றார். விழாவில், பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டிமுன்னதாக அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஆசிரியர் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளார்கள்.
அ.தி.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீண்டும் தான் கட்சியை வழிநடத்துவேன் என்று அவர் கூறியது நிருபர்கள் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ‘இந்த கட்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிவந்த கட்சி. மிகுந்த கட்டுப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை கூறக்கூடாது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் இதுபற்றி கூறவேண்டும்‘ என்றார்.