சாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


சாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன 4 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சாத்தூர்,

சாத்தூர் நகரில் பல இடங்களில் 4 ஆண்டுகளுக்குப்பிறகு ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினார்கள். தெற்கு ரத வீதியில் அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

எங்கும் ஆக்கிரமிப்பு

சாத்தூர் நகரின் பல இடங்களிலும் கடந்த 4 ஆண்டுகளாக ஆக்கிரப்புகள் அகற்றப்படாமல் முக்கிய வீதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிக்கிடந்தது. இந்த நிலையில் தாசில்தார் முத்துலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், மற்றும் நகரசபை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மேற்கொண்டனர்.

சாத்தூர் மெயின்ரோடு, முக்குராந்தல், வெம்பக்கோட்டை ரோடு, ரெயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. ஜே.சி.பி. எந்திரம் மூலம் வர்த்தக நிறுவனம் உள்ளிட்டவற்றின் முன்பாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இரும்பு கம்பிகள், பலகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு நகரசபை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளார்கள். ஆனாலும் இதனை தொடர்ந்து கண்காணித்து மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எதிர்ப்பு

நகரின் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் பெருமாள்கோவில் தெற்கு ரதவீதியில் உள்ள வைப்பாற்று வடக்கு கரையோரம் உள்ள வருவாய்த்துறையினருக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அதிகாரிகளால் அகற்ற முடியவில்லை. ஆக்கிரமிப்பினை அகற்ற சென்ற தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களாகவே குறிப்பிட்ட தேதிக்குள் அகற்றிக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டு அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டு விட்டனர்.


Next Story