வில்லியனூர் திருக்காஞ்சி கோவிலில் கவர்னர் ஆய்வு


வில்லியனூர் திருக்காஞ்சி கோவிலில் கவர்னர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் திருக்காஞ்சி கோவிலில் கவர்னர் ஆய்வு மரக்கன்றுகள் நட்டார்

வில்லியனூர்,

கவர்னர் கிரண்பெடி நேற்று காலை வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கோவில் வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டார்.

கோவிலுக்கு சென்றார்

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி நேற்றுக் காலை, வில்லியனூரில் உள்ள திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் தனி அதிகாரி சீதாராமன், தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்த கவர்னர் கிரண்பெடி, பின்னர் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கோவிலின் தல வரலாறு பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து கோவிலுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன? அவை எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்ற விவரங்களை கேட்டறிந்தார். கோவிலுக்கு வருமானம் எவ்வளவு வருகிறது. அரசு எவ்வளவு நிதி வழங்குகிறது என்பன போன்ற பல விவரங்களை கேட்டறிந்தார். மேலும் கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மரக்கன்றுகள் நட்டார்

தொடர்ந்து கோவில் முழுவதையும் சுற்றிப்பார்த்த அவர், காலியாக இருந்த இடங்களில் மரக்கன்றுகள் நட்டார். கவர்னர் கோவிலுக்கு வந்ததையொட்டி அங்கு வந்திருந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மணப்பட்டு கடற்கரையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.


Next Story