ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிக்க நுழைவுத்தேர்வு 1½ லட்சம் பேர் எழுதினார்கள்
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு நேற்று ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் நடந்தது.
புதுச்சேரி,
ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வினை எழுத நாடு முழுவதும் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு நேற்று காலை, மாலை என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடந்தன. இதற்காக 75 நகரங்களில் 339 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதுவையில் 1,861 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வுகள் காலை 10 மணிமுதல் 12–30 மணிவரையிலும், பிற்பகல் 3 மணிமுதல் 5–30 மணிவரையிலும் நடந்தது. நேற்று காலை நடந்த தேர்வுகளை 67 ஆயிரத்து 182 பேர், பிற்பகல் தேர்வினை 82 ஆயிரத்து 187 பேர் என ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 369 பேர் எழுதினார்கள்.
இந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் வருகிற 19–ந்தேதியோ அதற்கு முன்பாகவோ வெளிவர வாய்ப்பு உள்ளதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.