பள்ளிபாளையம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
பள்ளிபாளையம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை அடுத்த அம்மாசிபாளையத்தில் நேற்று புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதையொட்டி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு மதுக்கடையை மூடவேண்டும் என வலியுறுத்தினர். அப்போது அவர்கள் மதுவை ஒழிப்போம், மக்களை காப்போம் என பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷம் போட்டனர்.
பின்னர் அவர்கள் மதுக்கடையை மூட வேண்டும் என கோரி நேற்று மதியம் அம்மாசிபாளையத்தில் சாலைமறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலைந்து சென்றனர்இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிபாளையம் மற்றும் மொளசி போலீசார் அங்கு விரைந்து வந்து சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மதுக்கடையை மூட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினார்கள். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.