திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்தனர்


திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 5 Jun 2017 2:46 AM IST (Updated: 5 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள தியாகராஜருக்கு ‘செண்பகத் தியாகராஜர்’ என்றும், அம்மனுக்கு ‘நீலோத்பலாம்பாள்’ என்றும் பெயர். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சொர்ணகணபதி, வள்ளி-தேவசேனா சுப்ரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் உடன் செண்பகத்தியாகராஜர் பிரசித்தி பெற்ற உன்மத்த நடனத்துடன் தேருக்கு எழுந்தருளினர்.

நேற்று காலை விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாஜனம் மற்றும் தேர்க்கால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ஆர்.கேசவன், கோவில்கள் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

5 தேர்கள்

பல ஆண்டுகளுக்கு முன் திருநள்ளாறு தேரோட்டத்தின்போது பஞ்சமூர்த்திகளுக்கும் 5 தேர்கள் ஓடின. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாக்களில் சுவாமி, அம்மன் தேர்கள் மட்டுமே தேரோட்டத்தில் இடம்பெற்றன. இந்தநிலையில் தேவஸ்தானம் சார்பில் சொர்ணகணபதி, வள்ளி-தேவசேனா சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் புதிதாக தேர்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் திருநள்ளாறு தேரோட்டத்தில் பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில்(5 தேர்களில்) எழுந்தருளி பவனி வந்தனர். இதைப்போல நேற்றும் ஒரே நேரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனாசுப்பிரமணியர், சென்பக தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் 5 தேர்கள் ஓடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


Related Tags :
Next Story