நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் கலெக்டர் பேட்டி


நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 5 Jun 2017 4:15 AM IST (Updated: 5 Jun 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த பஸ் நிலையம் உள்பட நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று திருச்சி புதிய கலெக்டர் கே.ராஜாமணி கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த கே.எஸ்.பழனிசாமி திருப்பூர் மாவட்ட கலெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கே.ராஜாமணி நேற்று திருச்சி மாவட்ட புதிய கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார். கே.ராஜா மணி, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர். இவர் தமிழக அரசின் குரூப்-1 தேர்வு மூலம் துணை கலெக்டராக பணியில் சேர்ந்து, மாவட்ட திட்ட அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று தற்போது திருச்சி மாவட்டத்தின் 141-வது கலெக்டராக பதவி ஏற்று உள்ளார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களை திருச்சி மாவட்டத்தில் தகுதியான அனைத்து மக்களுக்கும் முறையாகவும், சிரமம் இன்றியும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றுவேன். தற்போது வறட்சியான சூழ்நிலை இருப்பதால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. குடிநீர் பிரச்சினையை எந்தவித தயக்கமும் இன்றி தீர்த்து வைக்க முயற்சி எடுப்பேன்.

நிலுவை திட்டங்கள்

திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படவேண்டும், உய்ய கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பணி தாமதம் உள்பட பல பிரச்சினைகளை பத்திரிகையாளர்கள் கவனத்துக்கு கொண்டு வந்து உள்ளனர். இதுபோன்று நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அவற்றை விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story