கீழப்பழுவூர் பேரடச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கீழப்பழுவூர் பேரடச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூர் பேரடச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்துள்ள கீழப்பழுவூரில் பேரடச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செல்வவிநாயகர், பாப்பாத்தியம்மன், பிச்சையம்மன், பொன்னியம்மன், பெரியநாயகி அம்மன், மதுரைவீரன், கருப்புசாமி, ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பிகை சமேத அய்யனார், லாடசன்னியாசி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியும் உள்ளது. பேரடச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங் களின் மூலஸ்தான விமானங்கள் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது.

யாகசாலை பூஜை

இதையடுத்து கடந்த 2-ந் தேதி முதற்கால யாகசாலை பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், காலகர்ணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் லட்சுமி, கணபதி பூஜை உள்ளிட்ட இரண்டாம் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை, பஞ்சகணபதி பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை 8.30 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான செல்வவிநாயகர், பாப்பாத்தியம்மன் சுவாமிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பேரடச்சியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து பேரடச்சியம்மன், செல்வவிநாயகர், பாப்பாத்தியம்மன், ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பிகை சமேத அய்யனார் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல், சமூக ஆர்வலர் கதிர் கணேசன் உள்பட பிரமுகர்கள் மற்றும் கீழப்பழுவூர், பொய்யூர், பாளையபாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story