சாம்ராஜ்நகரில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்


சாம்ராஜ்நகரில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:09 AM IST (Updated: 5 Jun 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

சிக்கஹள்ளி பகுதியில், புதிதாக அணை தமிழக அரசு அணைகட்ட கூடாது என்பதை வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கொள்ளேகால்,

சிக்கஹள்ளி பகுதியில், புதிதாக அணை தமிழக அரசு அணைகட்ட கூடாது என்பதை வலியுறுத்தி சாம்ராஜ்நகர் டவுனில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அணைகட்ட விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து போதிய நீர் கிடைக்காததாலும் விவசாயம் செய்ய முடியாமல் தமிழக விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் பல இடங்களில் அணைகட்டவும் அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா சிக்கஹள்ளி பகுதியில் புதிதாக அணைக்கட்ட வேண்டும் என்று விவசாயிகள், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அணைகட்ட தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

சாலை மறியல் போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள புவனேஸ்வரி சர்க்கிள் முன்பு சிக்கஹள்ளி பகுதியில் தமிழக அரசு அணைகட்ட கூடாது என்பதை வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியின் வழியாக சிக்கஒலே, சுவர்ணாவதி அணைகளுக்கு தண்ணீர் வருகிறது. இந்த அணைகளை நம்பி சாம்ராஜ்நகர் தாலுகா விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் சிக்கஹள்ளி பகுதியில் அணைகட்டினால் தண்ணீர் வராமல் சாம்ராஜ்நகர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு சிக்கஹள்ளி பகுதியில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.

மேலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பினரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.



Next Story