கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உடல் கருகி பலி
வேலூர் அருகே உள்ள சதுப்பேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார்.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள சதுப்பேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
மூதாட்டி உடல் கருகி சாவுவேலூர் அருகே உள்ள சதுப்பேரி இந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சாரதம்மாள் (வயது 72). லட்சுமணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சாரதம்மாள், அவரது மகள் சம்பூர்ணம் (52) வீட்டின் முன்பு உள்ள இடத்தில் கூரை வீடு அமைத்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சாரதம்மாள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டிருந்தது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. வீட்டின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு கியாஸ் சிலிண்டர் வெளியே வந்து விழுந்தது. இந்த தீ விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணைகியாஸ் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டதும் சம்பூர்ணமும், அக்கம் பக்கத்தினரும் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாரதம்மாளின் குடிசை வீடு தீப்பற்றி எரியவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கும், அரியூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். உடல் கருகி பலியான மூதாட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.