செம்மரக்கட்டைகள் கடத்தியதாக 21 பேர் கைது
கடப்பா மாவட்ட வனப்பகுதிகளில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி,
கடப்பா மாவட்ட வனப்பகுதிகளில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து கோடரி, வாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திராவில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை கடத்தல்காரர்கள், கூலித்தொழிலாளிகள் மூலம் வெட்டி வாகனங்களில் கடத்தி வருகின்றனர். செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர மாநில போலீசார், வனத்துறையினர், செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். செம்மரக்கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகவே நடந்து வருகிறது. செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு ஏராளமான தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தீவிர சோதனைஇந்தநிலையில் நேற்று முன்தினம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அக்கிரெட்டிப்பள்ளியில் செம்மரங்களை வெட்டிக் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த அப்துல்நைம், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்த திருப்பதி (வயது 32), பரசுராம் (30), அன்புராஜ் (27), தீர்த்தன் (30), வெங்கடேசன் (28), லோகநாதன் (25) என்பது தெரிய வந்தது.
அதில் அப்துல்நைமுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும், அவர் மீது செம்மரக்கடத்தல் சம்பவம் தொடர்பாக 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. அவர் ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் குடோன்கள் அமைத்து, அதில் செம்மரக்கட்டைகளை பதுக்கி ராஜஸ்தான் மாநிலம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருவது தெரிய வந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிப்பு ரூ.30 லட்சம்அதேபோல் கலசாபடு மண்டலம் ராமபுரம் கிராமத்தையொட்டி உள்ள தடுக்குச்செருவு பகுதியில் செம்மரங்களை கடத்தியதாக பாப்பிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்த சந்திரன் (42), லட்சுமணன் (37), குழந்தைசாமி (27), சுப்பிரமணி (50), அண்ணாமலை (55), சங்கர் (35), வேடியப்பன் (35) ஆகியோரையும், கசிநாயன மண்டலம் இடுகலபாடு பகுதியில் திருப்பதி (31), அசோக்குமார் (33), மற்றொரு திருப்பதி (37), மஞ்சுயப்பன் (27), லட்சுமணன் (28), மாதவன் (35), ஆண்டியப்பன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட இடங்களில் மொத்தம் 21 பேர் கைதானார்கள். அவர்களிடம் இருந்து மொத்தம் 400 கிலோ எடையிலான 21 செம்மரக்கட்டைகள், 14 செல்போன்கள் மற்றும் கோடரி, வாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இந்தத் தகவலை கடப்பா மாவட்ட செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சத்தியஏசுபாபு தெரிவித்தார்.