விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் ரூ.36½ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்


விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் ரூ.36½ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:45 AM IST (Updated: 6 Jun 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.36½ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு நேற்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த அப்பாஸ் வகாபுதீன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பையின் அடிப்பாகத்தில் பழைய செய்தித்தாளில் சுருட்டி வைத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் பணமான டாலர், சவுதி அரேபிய நாட்டு பணமான ரியால் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் பணத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் இந்திய மதிப்பில் ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.36½ லட்சம்

இதேபோல் அதே விமானத்தில் வந்து இறங்கிய சென்னையை சேர்ந்த அப்துல் ஹக் என்பவருடைய பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் அவர் மறைத்து வைத்து அமெரிக்க டாலர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் இந்திய மதிப்பில் ரூ.18 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அதே விமானத்தில் வந்து இறங்கிய திருச்சியை சேர்ந்த ரியாஸ் கான் தனது பேக்கில் மறைத்து வைத்து அமெரிக்க டாலர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணத்தை கடத்தி வந்ததையும் அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி 3 பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணம் இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.36 லட்சத்து 55 ஆயிரம் ஆகும். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணத்தை கடத்தி வந்த அப்பாஸ் வகாபுதீன், அப்துல் ஹக், ரியாஸ் கான் ஆகிய 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story