சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி நிறுத்தம்
தீ விபத்தில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த மாதம் 31–ந் தேதியன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 7 மாடி கட்டிடம் உருக்குலைந்தது. கட்டிடத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்த கட்டிட வல்லுனர்கள், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை அபாயகரமானது என்று அறிவித்தனர்.
இதையடுத்து அந்த 7 மாடி கட்டித்தை இடித்து தரைமட்டமாக திட்டமிடப்பட்டு, உடனடியாக அந்த பணிகள் 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. கட்டிடத்தை இடிப்பதற்காக ‘ஜா கட்டர்’ என்ற 2 நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அந்த எந்திரத்தின் மூலம் கட்டித்தை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.
சல்லடை துணி
கட்டிடத்தை இடிக்கும்போது புகை மண்டலம் போன்று அப்பகுதி காட்சியளிக்காமல் இருக்க கட்டிடத்தின் மீது அவ்வப்போது தண்ணீரை பீய்ச்சி அடிக்கப்பட்டு வந்தது. ‘சென்னை சில்க்ஸ்’ கட்டிடத்தில் தீ முழுவதும் அணைக்கப்பட்டு விட்டாலும், கனல் துணிகழிவுகள் கட்டிட இடிபாடுகளில் காணப்படுகின்றன.
காற்று வேகமாக வீசும்போது அந்த கழிவுகள் அவ்வப்போது தீ பிடித்து எரிகின்றன. கட்டிட இடிபாடுகளில் இருந்து தூசு பறக்காமல் இருப்பதற்காக சாரம் அமைத்து ராட்சத சல்லடை துணி கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் அருகே உள்ளவர்கள் தெரிவித்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இடிக்கும் பணி நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று காலையில் ‘ஜா கட்டர்’ எந்திரம் மூலம் வழக்கம்போல் கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தரப்பில் இருந்து சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறி கட்டிடத்தை இடித்து வரும் ஊழியர்கள் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென பணியை தற்காலிகமாக நிறுத்தினர்.
7–வது தளத்தில் ஏ.சி. கட்டுப்பாட்டு கருவிகளை அகற்றுவதில் சிக்கல் நீடிப்பதால், கட்டிடத்தை இடிக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. ஊழியர்களின் திடீர் பணி நிறுத்தத்தால் கட்டிடத்தை இடிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தை முழுவதுமாக இடிக்க இன்னும் 2 வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் என்ன?
இதுகுறித்து கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘‘ பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதுவரையிலும் ரூ.30 லட்சம் செலவு செய்திருக்கிறோம். அந்த பணம் திரும்ப பெறுவதற்கே உத்தரவாதம் இல்லை. தற்போது சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தரப்பில் இருந்து முறையாக ஒத்துழைப்பு தராததால் பணியை நிறுத்தி வைத்துள்ளோம்’’ என்றனர்.
Related Tags :
Next Story