மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் சீமான் தலைமையில் நடந்தது
இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை செய்யும் மத்திய அரசின் ஆணையை கண்டித்து சென்னையில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை செய்த மத்திய அரசின் ஆணையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், சிவகுமார், கலைக்கோட்டுதயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
என்ன நியாயம்?
உணவு, உடை ஆகியவற்றை வாழும் இடம்தான் தீர்மானிக்க வேண்டும். உணவு என்பது மனித உரிமைகளில் ஒன்று. அதில் மத்திய அரசு தலையிடுவது அநாகரிகமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாட்டுக்கறி என்று கூறி மதவெறி தான் தலைவிரித்தாடுகிறது. இந்த தடை ஆணையை திரும்பப் பெறவிட்டால், மீறுவது தான் ஒரே வழியாக இருக்கமுடியும். எனவே இந்த ஆணையை திரும்பப்பெறுவது நல்லது.
மாட்டிறைச்சி டன் கணக்கில் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உள்ளூர்காரன் மாட்டிறைச்சி சாப்பிட்டால் அதை ஏற்கமறுப்பது என்ன நியாயம்? தமிழகத்தில் பா.ஜ.க. அரசு தான் செயல்படுகிறது. எனவே மத்திய அரசின் தவறான அணுகுமுறைக்கான எதிர்ப்பு தமிழக அரசிடம் இருந்து வராது.
தமிழகத்தில் அரசியல் அணுகுமுறைகள் வித்தியாசமாகவே இருந்துவருகிறது. ஜனாதிபதி தேர்தல் வரை தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எனவே இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story