கூடலூர் வனப்பகுதி பசுமைக்கு திரும்புவதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


கூடலூர் வனப்பகுதி பசுமைக்கு திரும்புவதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 4:00 AM IST (Updated: 6 Jun 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் கூடலூர் வனப்பகுதி பசுமைக்கு திரும்புகிறது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

கூடலூர்,

கூடலூர், முதுமலை பகுதியில் கடந்த 3 மாதங்களாக கடும் வறட்சி காணப்பட்டது. இதனால் புற்கள் கருகியதால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வந்தது. கூடலூர், முதுமலை வனப்பகுதி பசுமை இழந்து காணப்பட்டதால் நீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அடிக்கடி சாரல் மழை பெய்து வந்தது. இதனால் ஓரளவுக்கு வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுகுளு காலநிலை காணப்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் கூடலூர் பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

மேலும் கூடலூர், முதுமலை வனங்களில் பசுமை திரும்பி வரும் நிலை உள்ளது. கோடை காலத்தின்போது முதுமலையில் காட்டு யானைகள் மட்டுமே சாலையோரம் வந்து நிற்கும். ஆனால் தற்போது பசுமையாக காட்சி அளிப்பதால் புள்ளிமான்கள், கடமான்கள் பசும் புற்களை அதிகளவு மேய்ந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் வனவிலங்குகளை கண்டு ரசித்து மகிழ்கின்றனர். மேலும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் பயணிகளை பிடித்து வனத்துறையினர் அபராதம் விதிப்பதுடன் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:– முதுமலை, கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வர தொடங்கி உள்ளது. மேலும் வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளதால் வனவிலங்குகளின் வருகையும் அதிகரித்துள்ளது. காட்டெருமை, புள்ளிமான்கள், கடமான்கள் அதிகளவு தென்படுகிறது. சாலையோரம் வனவிலங்குகள் நின்றிருந்தால் பொதுமக்கள் அதனை தொந்தரவு செய்யக்கூடாது. அவ்வாறு மீறி இடையூறு செய்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story