குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு


குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 6 Jun 2017 4:00 AM IST (Updated: 6 Jun 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி, பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பந்தலூர் அருகே கூவமூலா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் அந்த குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. அதன் அருகே தனியார் தொடக்கப்பள்ளி மற்றும் தேயிலைத்தோட்டம் உள்ளது. மேலும் அங்குள்ள நீரோடையில் பெண்கள் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர். மதுப்பிரியர்கள் தேயிலை தோட்டத்தில் மது அருந்தி விட்டு, சாலையில் சுற்றித்திரிவதால் நீரோடைக்கு வரும் பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

அகற்ற வேண்டும்

அந்த பகுதியில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு டாஸ்மாக் மதுக்கடை இடையூறாக இருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைக்கு மது அருந்த வரும் நபர்கள், சாலையில் போதையில் தள்ளாடியபடி நடந்து செல்கின்றனர். இதனால் அங்குள்ள பள்ளி மாணவ–மாணவிகள் அவதிப்படுகின்றனர். அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கேரி நாங்கள் போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன் அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்ட பார்வையற்றோர் சங்க நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிறுத்தம் அருகே சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் குண்டும், குழியுமாக காணப்படும் அந்த சாலையை சரிசெய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது

இது தவிர முகாமில், முதியோர் உதவித்தொகை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்பட 70 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.


Next Story