ஊட்டி அருகே முதியவரை முட்டிய காட்டெருமை பள்ளத்தில் தவறி விழுந்து சாவு


ஊட்டி அருகே முதியவரை முட்டிய காட்டெருமை பள்ளத்தில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 6 Jun 2017 3:45 AM IST (Updated: 6 Jun 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே முதியவரை முட்டிய காட்டெருமை பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தது.

ஊட்டி,

ஊட்டி அருகே உள்ள கேத்தி ராஜ்குமார் நகரை சேர்ந்தவர் மைதீன் (வயது 63) கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக அந்த பகுதியில் ரெயில் தண்டவாளத்தையொட்டி உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள புதர் மறைவில் ஒரு காட்டெருமை நின்று கொண்டிருந்தது. அதனை பார்த்ததும் மைதீன் காட்டெருமையிடம் இருந்து தப்பித்து செல்வதற்காக ஓட்டம் பிடித்தார். ஆனால் காட்டெருமை துரத்தி வந்து அவரை முட்டி தள்ளியது. இதில் மைதீன் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து, அங்குள்ள கிளையை கையால் பிடித்துக்கொண்டதால் உயிர் தப்பினார்.

காட்டெருமை சாவு

மேலும் காட்டெருமை மீண்டும் அவரை முட்ட வந்த போது, 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும் காட்டெருமை முட்டியதில் மைதீனுக்கு தலை மற்றும் முதுகு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த மைதீனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் ராமச்சந்திரன், வனவர் சசிதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த காட்டெருமையை பார்வையிட்டனர். அதன் பின்னர் அங்கேயே, அதனை குழி தோண்டி காட்டெருமை புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,ஊட்டி அருகே உள்ள கேத்தி பகுதியில் காட்டெருமை நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது உணவு தேடி குடியிருப்பு பகுதியிலும் புகுந்து விடுவதால், மக்கள் பீதி அடையும் நிலை உள்ளது. இந்த நிலையில் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. ஆகவே காட்டெருமைகள் தாக்குவதை தடுக்க, குடியிருப்பு பகுதிக்குள் அவைகள் நுழையாமல், வனத்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். குடியிருப்புகள் நுழைந்தால் உடனே வந்து, அவற்றை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story