கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மதுக்கடைக்கு எதிராக திரண்டு வந்த பள்ளி மாணவர்கள்


கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மதுக்கடைக்கு எதிராக திரண்டு வந்த பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மதுக்கடைக்கு எதிராக திரண்டு வந்த பள்ளி மாணவர்கள் கிராம மக்கள் குழந்தைகளுடன் வந்து தர்ணா போராட்டம்

கோவை,

மதுக்கடைக்கு எதிராக பள்ளி மாணவர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர். இதேபோல கிராம மக்கள் குழந்தைகளுடன் வந்து புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

பள்ளி மாணவர்கள்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது பள்ளிக்கூட மாணவர்கள் சிலர் சீருடையில் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஹரிகரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. மார்க்கெட் பிளேக் மாரியம்மன் கோவில் அருகில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள அந்த கடையை சுற்றி ராஜவீதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 5–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகிறார்கள். பள்ளி மாணவ–மாணவிகளாகிய நாங்கள் மதுக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. அப்போது எங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

கோர்ட்டு உத்தரவின்படி வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் இருக்கும் இடங்கள், முதியோர் இல்லம், மருத்துவமனை உள்ள இடங்களில் மதுக்கடைகள் இருக்க கூடாது. எனவே கோவில் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தர்ணா போராட்டம்

இதே போல கோவையை அடுத்த ராக்கிபாளையம் கிராம மக்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். உடனே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னர் குடும்பத்துடன் வந்த கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ராக்கிபாளையத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைய உள்ளது. அந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ராக்கிபாளையத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

இது தவிர மற்றொரு டாஸ்மாக் மதுக்கடை அங்கு அமைந்தால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக அமையும். மேலும் பள்ளி, கோவில், ரே‌ஷன் கடைக்கு செல்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே அங்கு புதிதாக மதுக்கடை அமைக்காமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story