புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
திருப்பூர் முத்தனம்பாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் முத்தனம்பாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
புதிதாக டாஸ்மாக் கடைதிருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
முத்தனம்பாளையம் அருவங்காட்டு தோட்டத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும்போது பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள். டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் அரசு கால்நடை மருந்தகம், விவசாய தோட்டங்கள் உள்ளன.
டாஸ்மாக் கடை அமையும்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடையை அமைக்கக்கூடாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இலவச வீட்டுமனைப்பட்டாகூட்டத்தில், அவினாசி தாலுகா தெக்கலூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 295 குடும்பத்தினர் கடந்த 17 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இங்குள்ளவர்களுக்கு பகுதி வாரியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் பலருக்கு வீட்டுமனைப்பட்டா தேவை உள்ளது. நாங்கள் பலமுறை விண்ணப்பித்தும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளன. உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு வழங்காமல் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க தற்போது தேர்வு செய்து வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் குருவாயூரப்பன் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் காலி இடத்தில் தொழுகை நடத்த முயற்சி செய்து வருகிறார்கள். அதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்துக்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினையில் சுமூகமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குடிசை மாற்று வாரியம்தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 15.வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் அளித்த மனுவில், தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 1, 5, 6, 14 ஆகிய வார்டுகளை சேர்ந்த 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை அவர்கள் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை. சிலர் அந்த மக்களிடம் சென்று பணம் பறிக்கும் வேலையை செய்து வருகிறார்கள். பயனாளிகள் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் வந்து அளித்த மனுவில், கடந்த 20 நாட்களுக்கு முன் பண்ணைக்கிணறு பஸ் நிறுத்தத்தில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த 5 பேர், அவர்களை சாதி பெயரை சொல்லி தாக்கி விட்டு தப்பினார்கள். இதுகுறித்து குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் உள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
236 மனுக்கள்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 236 மனுக்கள் பெறப்பட்டன. பல்லடம் தாலுகா பனிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவருடைய மனைவிக்கு முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகையாக ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்.