பெரியபாளையத்தில் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்


பெரியபாளையத்தில் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையத்தில் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் செங்காத்தாகுளம் செல்லும் சாலையில் யானம்பாக்கம் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடையை மூடக்கோரியும் செங்காத்தாகுளம், யானம்பாக்கம், கல்பட்டு, மேல்மாளிகைபட்டு, கீழ்மாளிகைபட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட செங்காத்தாகுளம் கிராம எல்லையில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

அவர்களை பெரியபாளையம் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள், மதுக்கடைக்கு முன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.

தாசில்தார் பேச்சுவார்த்தை

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள், மதுக்கடையை மூடும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.

இதுபற்றி மாவட்ட டாஸ்மாக் அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். அதை ஏற்று பெண்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வெங்கல் அருகே...

இதேபோல் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராம எல்லையில் வெங்கல்–சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டு உள்ள 2 மதுக்கடைகளை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மதுக்கடைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் அமணம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சரண்யா மற்றும் வெங்கல் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி 2 கடைகளையும் மூட நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை 2 கடைகளும் தற்காலிகமாக மூடப்படும் எனவும் வருவாய் ஆய்வாளர் கூறினார். அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

மதுபிரியர்கள் கோ‌ஷம்

பெண்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக 2 மதுக்கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான மதுபிரியர்கள் கடை முன் திரண்டனர். அவர்கள் எங்களுக்கு மதுக்கடை திறக்க வேண்டும் என்று கூறி கோ‌ஷமிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story