சுத்தமான குடிநீர் வழங்க புதிய உறைகிணறு அமைக்க வேண்டும் கலெக்டரிடம், கோரிக்கை


சுத்தமான குடிநீர் வழங்க புதிய உறைகிணறு அமைக்க வேண்டும் கலெக்டரிடம், கோரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க புதிய உறைகிணறு அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனுகொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அவர் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

அப்போது, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த காசிராமன் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கி வரும் உறைகிணறு பழுதடைந்து விட்டது. ஆற்றுக்குள் அமைந்துள்ள இந்த உறைகிணறு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பழுதானது. இதனால் அங்கிருந்து எடுக்கப்படும் நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் ஆற்றில் தூர்வாரும் பணி நடப்பதால், தண்ணீர் தேங்கி பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அந்த தண்ணீரை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். எனவே ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, புதிய உறைகிணறு அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மீனவர்கள்

இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில், தூத்துக்குடியை சேர்ந்த இந்து மீனவர் கள், சமீபகாலமாக புன்னகாயல், திருச்செந்தூர், அமலிநகர், மணப்பாடு உள்ளிட்ட கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் போது, அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் ஊர் கமிட்டி என்ற பெயரில் மீனவர்களை பிடித்து வைத்து, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை மிரட்டி வாங்கி கொண்டு, அவர்களை விடுவிக்கின்றனர்.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக் குடி திரேஸ்புரத்தை சேர்ந்த 5 இந்து மீனவர்கள் மணப்பாடு அருகே மீன்பிடிக்க சென்ற போது, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், திரேஸ்புரம் மீனவர்களை பிடித்து, எங்கள் பகுதியில் நீங்கள் மீன் பிடிக்க கூடாது என்று கூறி அவர்களை தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

100 நாள் வேலை

விளாத்திகுளம் தாலுகா கந்தசாமிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக எங்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. மேலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜெகவீரபுரத்தில் வேலை செய்ய நிர்பந்திக்கிறார்கள். எனவே எங்களுக்கு எங்கள் ஊரிலேயே வேலை செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறினர்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க.வினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்கள். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக மாதம் தோறும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த மாதம் இந்த கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்த மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட வேண்டிய மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டமும் நடத்தப்படவில்லை. இதனால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம், மக்களின் குறைகளை கேட்டறிந்து அவைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடத்தப்படாமல் இருக்கும் இந்த கூட்டங்களை விரைவில் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story