டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி தூக்கு கயிறு மாட்டி பெண்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி தூக்கு கயிறு மாட்டி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி, திப்மீனாட்சிபுரம், கொண்டலூர், பூவனூர், ஆரியங்காவூர், நாட்டார்பட்டி, மலையராமபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முதல்நாள் அன்று மதுக்கடையை முற்றுகையிட்டும், அங்கேயே பந்தல் போட்டு சமையல் செய்து சாப்பிட்டனர். இரண்டாவது நாள், மதுபாட்டில்களுக்கு தாலிகட்டி ஒப்பாரி வைத்தும், 3-வது நாள் பாடைகட்டி கொள்ளிகுடம் உடைத்தும், 4-வது நாள் மணப்பந்தல் அமைத்து ஆணுக்கு ஆண் தாலிகட்டியும் போராட்டம் நடத்தினர். 5-வது நாளான நேற்று கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தென்காசி தாசில்தார் அனிதா வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் 20 நாட்களுக்குள் இந்த கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும். அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள், மதுக்கடையை திறக்க விடுங்கள் என்றார்,

அதற்கு போராட்டக்காரர்கள், இந்த பகுதியில் மதுக்கடையே வேண்டாம். முற்றிலும் எடுத்து விடுங்கள், கடை அகற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர். பின்னர் தாசில்தார் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

நிரந்தரமாக மூடும் வரையில்...

போராட்டகாரர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவிதமாக நூதன போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர், இதனால் திப்பணம்பட்டி-ஆவுடையானூர் சாலை மிகவும் பரபரப்புடனே காணப்படுகிறது.

மதுக்கடையை நிரந்தரமாக மூடும் வரை தங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும், அதுவரை இங்கிருந்து போகப்போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story