நெல்லை கலெக்டராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு


நெல்லை கலெக்டராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பள்ளிக்கூடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கருணாகரன், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த சந்தீப் நந்தூரி நெல்லை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட சந்தீப் நந்தூரி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பேட்டி

இதைத்தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அதிகாரிகளுடன் சேர்ந்து சிறப்பாக மேற்கொள்வேன். மக்கள் நலத்திட்டங்கள் மக்களை 100 சதவீதம் சென்றடைய வேண்டும். அந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. அதேபோன்று நெல்லை மாநகராட்சியையும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் சேர்ப்பதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் கூடுதல் கட்டணம்

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நெல்லையை தூய்மையான மாவட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவேன். தனியார் பள்ளிக்கூடங்களில் கூடுதல் கல்வி கட்டணம் வசூல் செய்தால் அந்த பள்ளிக்கூடங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை நீடிப்பது குறித்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இருப்பை பொறுத்து முடிவு செய்யப்படும். நெல்லை மாநகராட்சியை மகிழ்ச்சி நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

2009-ம் ஆண்டு

புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி கடந்த 2009-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். விருதுநகரில் பயிற்சி கலெக்டராக பணியாற்றினார். இதைத்தொடர்ந்து சேலம், ஓசூரில் உதவி கலெக்டராகவும், சேலத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராகவும், சென்னை மெட்ரோ வாட்டர் செயல் இயக்குனராகவும், மதுரை மாநகராட்சி ஆணையாளராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story