வறட்சி நிவாரண தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வறட்சி நிவாரண தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் 72 கண்மாய்கள் பாசன சங்கம் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் சார்பில் அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:–
கடந்த 2015–16–ம் ஆண்டில் சோழந்தூர் பிர்க்கா முழுமைக்கும் மற்றும் ஆனந்தூர் பிர்க்காவில் ராதானூர் உள்பட 7 வருவாய் கிராமங்களும், மங்களக்குடி பிர்க்காவில் 6 வருவாய் கிராமங்களிலும் மழை முழுமையாக பொய்த்து போய் விவசாயம் அடியோடு இல்லாமல் போய்விட்டது. இதுதொடர்பாக விவசாயிகள் தொடர்ந்து மனு கொடுத்து வந்த நிலையில் அரசின் பரிந்துரைக்கு சென்றுள்ளதாகவும், நிதி வந்தவுடன் நிவாரண தொகை வழங்குவதாகவும் தெரிவிக்கபட்டது.
100 நாள் வேலைஆனால், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ. 3 கோடியே 75 லட்சம் பணம் வந்துள்ளதாகவும், அதனை முழுமையாக ராமநாதபுரம் பிர்க்காவிற்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். விவசாயம் பொய்த்து போய் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ள எங்களுக்கு நிவாரண தொகை வழங்கமுடியாது என்று தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட எங்களுக்கும் அரசின் நிவாரண தொகை கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டையன்வலசை பகுதியை சேர்ந்த கிராம மக்கள், அளித்த மனுவில், தங்கள் பகுதியில் ஒரு கிராமத்திற்கு மட்டும் 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருவதாகவும், மொட்டையன்வலசை, ஆலாப்புளி, ஏந்தல், முனிசுவலசை, உடைச்சியார்வலசை ஆகிய 5 கிராமங்களுக்கு 100 நாள் வேலை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விவசாயமும் இல்லாமல் வறுமை நிலையில் வாடும் எங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் தான் உதவியாக இருக்கும் என்பதால் உடனடியாக எங்கள் கிராமங்களுக்கும் வேலை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
உதவித்தொகை
மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சுகேசன் என்பவர் அளித்த மனுவில், கடந்த 2007–ம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணம் வெல்வட்டுதுறை பகுதியில் இருந்து அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளேன். இந்த நிலையில் கடந்த மாதம் பணிக்கொடை தணிக்கையின்போது நேரில் ஆஜராகி எனது பதிவை உறுதி செய்தேன். இதற்காக என்னிடம் உள்ள பதிவேட்டிலும், ரேஷன்கார்டிலும் பதிவு செய்துள்ளனர். ஆனால், பணிக்கொடை பதிவேட்டில் பதிவு செய்யவில்லை. இதன்காரணமாக என்னை பணிக்கொடை பதிவேட்டில் இருந்து நீக்கி விட்டனர். இதனால், உதவித்தொகை பெறமுடியாமல் அவதிஅடைந்து வருகிறேன். எனவே, உடனடியாக எனது பெயரை பதிவு செய்து தொடர்ந்து பணிக்கொடை கிடைக்க உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.